செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015


தி காட் ஃபாதர் நாவலை படமாக எடுக்க போவதாக பாரமவுண்ட் பிக்சர்ஸில் இருந்து அறிவிப்பு வந்த அடுத்த நாளே அடுத்த சிக்கலாக வந்து நின்றவர் ஜோ கொலோம்போ. சிசிலியன் மாஃபியா குடும்பங்களை உள்ளடக்கிய ஐந்து மாஃபியா குடும்பத்தில் ஒன்றான கொலோம்போ குடும்பத்தின் தலைவர் தான் ஜோ கொலோம்போ. தி காட் ஃபாதர் நாவலில் வரும் ஐந்து மாஃபியா குடும்பங்களின் பின்னனி மற்றும் இத்தாலியர்களை அதீத கொடூரமானவர்களாக காட்டியிருந்த அமைப்பு ஆகியவை படமாக உருவானால் தனக்கும் தன் குடும்பத்திற்க்கும் அவப்பெயரை உருவாக்கும் என்ற காரணத்தினால் தான் உருவாக்கிய இத்தாலிய அமெரிக்க குடியுரிமை அமைப்பின் மூலமாக படத்திற்கு எதிராக நியூயார்க் நகர வீதிகளில் பேரணி நடத்தினார், பேரணிக்கு ஆதரவாக இத்தாலியர்கள் ஒன்று திரண்ட போதிலும் படத்தை நிறுத்துவதற்கான சாத்திய கூறுகள் எதுவும் தென்படாததால் கதையில் காட்டப் பட்டிருக்கும் விட்டோ கார்லியோனின் அணுகுமுறையை போன்றே வன்முறை வழியை கையிலெடுத்தார். தயாரிப்பாளர் அல் ருட்டின் கார் கண்ணாடிகளை உடைத்து படத்தை உடனே நிறுத்துமாறும் இல்லையேல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற குறிப்பையும் விட்டுச்சென்றனர் அவரின் அடியாட்கள், அடுத்ததாக எவான்ஸை தொலைபேசியில் அழைத்து உடனே ஊரை காலி செய்யுமாறும் இல்லையேல் அவரது முகத்தை கிழித்து அவரின் குழந்தையையும் காயப்படுத்த போவதாக மிரட்டல் விடுத்தார். படப்பிடிப்பு நடைப்பெற்ற இடங்களில் எல்லாம் வன்முறை வெடிக்கவே மேற்கொண்டு படப்பிடிப்பை தொடரும் நிலை இல்லாமல் போனதால் கொலோம்போவை நேரடியாக சந்திக்கும் முடிவிற்கு வந்த பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஒரு ஹோட்டலில் அல் ருட்டியும் கொலோம்போவும் சந்திக்க ஏற்பாடு செய்தது. படத்தில் மாஃபியா என்ற வார்த்தையை நீக்க வேண்டும் மற்றும் தங்களது அமைப்புக்கு படம் வெளியானதும் நன்கொடை வழங்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன் வைத்தார் கொலோம்போ, ருட்டியும் அதற்கு சம்மதிக்கவே தன் இத்தாலிய அமெரிக்க குடியுரிமை அமைப்பு மூலமாக படத்திற்கு தேவையான எந்த உதவியையும் வழங்குவதாகவும் கூறினார் கொலோம்போ அதோடு நில்லாமல் ஜிகர்டண்டா அசால்ட் சேதுவைப் போல படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலெல்லாம் தவராமல் ஆஜர் ஆனார், டான் விட்டோ கார்லியோனின் மருமகன் கார்லோ ரிஷி பாத்திரத்தில் நடிக்க  தன்னுடன் இருந்த கியானி ரூசோவை சிபாரிசு செய்து அவரை நடிக்கவும் வைத்தார். படம் முடிவதற்கு முன்னதாகவே சுடப்பட்டதால் கொலோம்போவின் இடைஞ்சல்களும் நின்றுவிட அவரது அமைப்புக்கும் எந்த ஒரு நங்கொடையையும் வழங்கும் நிலை பாரமவுண்ட் பிக்சர்ஸுக்கு வரவில்லை.


கொலோம்போவின் மெய்காவலரான லென்னி மாண்டெனோ டான் விட்டோ கார்லியோனின் மெய்காவலர் கதாப்பாத்திரமான லூக்கா பிராசியின் வேடத்திற்கு பொருத்தமாக இருந்ததால் அவரையும் நடிக்க வைத்தார் காப்போலோ. படத்தில் இவர் பிராண்டோவுடன் பேசும் காட்சியில் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார் எத்தனை முறை ஒத்திகை பார்த்திருந்தாலும், பிராண்டோ முன்னால் வந்து நின்றதும் இயல்பாக நடிக்க முடியவில்லை, திரும்ப திரும்ப இந்த காட்சியை ஒளிப்பதிவு செய்ய விரும்பாத காப்போலோ, இந்த காட்சிக்கு முன்பாக டான் விட்டோ கார்லியோனை சந்திக்கும் முன் லூக்கா பிராசி அவருடன் பேசுவதற்கான வசனத்தை ஒத்திகை பார்ப்பது போல் ஒரு புது காட்சி ஒன்றை அமைத்தார் அதன் மூலம் அவர் பதட்டத்துடன் நடித்து கொடுத்த அந்த காட்சியும் அந்த சூழலுக்கு ஏற்றவாறு பொருந்தியது.

நடிகர்கள் தங்களின் மாஃபியா கதாப்பாத்திரத்திற்கான உடல் மொழியை மேம்படுத்துவதற்காக உண்மையான மாஃபியா கும்பலை சார்ந்தவர்களுடனே தங்களது ஆய்வு பணியை தொடங்கினார்கள். பிராண்டோ பஃபொலினொ கும்பலை சார்ந்த ஒருவரை சந்தித்து தனது பாத்திரத்திற்கான உடல் மொழியை மேலும் மெருகேற்றினார். அல் பாசினோ, ஜேம்ஸ் கான், ராபர்ட் டுவாள் ஆகியோரும் தங்களது பாத்திரத்திற்கான ஆய்வுக்காக மாஃபியா கும்பலுடன் சுற்றித்திரிந்தனர். படத்தில் முக்கிய கதாப்பாதிரத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரின் உடல்மொழியும் நிஜ மாஃபியாக்களிடம் இருந்து கற்று கொண்டது, இதர நடிகர்களோ ஏற்கனவே உண்மையான மாஃபியாக்களுடன் பணி புரிந்தவர்கள் என்பதால் அவர்களின் கதாப்பாத்திரத்திற்காக எந்த ஆய்வையும் மேற்கொள்ளும் அவசியம் இல்லாமல் போனது.

தொடரும்...



0 திட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்:

கருத்துரையிடுக